விருத்தாசலம் டாஸ்மாக் விற்பனையாளரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயற்சி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விருத்தாசலம் டாஸ்மாக் விற்பனையாளரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயற்சி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Sept 2019 4:00 AM IST (Updated: 1 Sept 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் டாஸ்மாக் விற்பனையாளரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

உளுந்தூர்பேட்டை,

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆலடியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கண்ணன் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு, விற்பனையான பணத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

திருநாவலூர் அருகே திமிர்ரெட்டிபாளையம் என்ற இடத்தின் அருகில் சென்றபோது, அங்கு சாலையோரம் உள்ள சவுக்குதோப்புக்குள் இருந்து வந்த மர்மநபர்கள் 4 பேர் திடீரென கண்ணனை வழிமறித்தனர். உடனே அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது மர்மநபர்கள் 4 பேரும் கண்ணனை அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் அவர்கள் கண்ணன் வைத்திருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். அந்த சமயத்தில் அவ்வழியாக சிலர் மோட்டார் சைக்கிள்களில் வந்து கொண்டிருந்தனர். இதை பார்த்த மர்மநபர்கள் பணப்பையை பறிக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து சவுக்கு தோப்புக்குள் ஓடி தலைமறைவாகி விட்டனர்.

இதற்கிடையே மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயமடைந்த கண்ணனை, மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணனை அரிவாளால் வெட்டி பணத்தை பறிக்க முயன்ற மர்மநபர்களை திருநாவலூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story