மகராஜகடை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
மகராஜகடை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
குருபரப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அருகே உள்ளது கல்லுகுறி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் (வயது 49). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 12 பவுன் நகைகளை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதற்கிடையே வீட்டிற்கு வந்த குப்பன், கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் மகராஜகடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story