சிதம்பரம் அருகே, கார் வாங்கி கொடுக்காததால் இளம் பெண்ணின் கருவை கலைத்த கொடூரம் - கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு


சிதம்பரம் அருகே, கார் வாங்கி கொடுக்காததால் இளம் பெண்ணின் கருவை கலைத்த கொடூரம் - கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 31 Aug 2019 10:15 PM GMT (Updated: 31 Aug 2019 9:14 PM GMT)

சிதம்பரம் அருகே கார் வாங்கி கொடுக்காததால் இளம்பெண்ணின் கருவை கலைத்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பரங்கிப்பேட்டை,

சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடியை சேர்ந்தவர் ஜெயபால் மகன் நவீன்ராஜ். இவர் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சிதம்பரம் அடுத்த கீழ்புவனகிரி லிங்கபைரவர் நகரை சேர்ந்த சங்கீதபிரியா(வயது 22) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் நவீன்ராஜ் தனது மனைவி மற்றும் தந்தை ஜெயபால், தாய் சகிலா, தங்கை வினோதினி, தம்பி கேசவராஜ் ஆகியோருடன் மராட்டிய மாநிலத்திற்கு சென்றார். அங்கு அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சங்கீதபிரியா கர்ப்பமானார். இவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த வாரம் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் மராட்டியத்தில் இருந்து சி.கொத்தங்குடிக்கு வந்தார். அப்போது நவீன்ராஜ் தனது மனைவியிடம், உன் பெற்றோர் வீட்டுக்கு சென்று தனக்கு கார் வாங்கித்தருமாறு கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நவீன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கருக்கலைப்புக்கான மாத்திரை வாங்கி சங்கீதபிரியாவுக்கு கொடுத்தனர். அதை அவர் சாப்பிட மறுத்துள்ளார். இருப்பினும் வலுக்கட்டாயமாக அந்த மாத்திரையை அவருக்கு கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட சில மணி நேரங்களில் அவரது வயிற்றில் வளர்ந்த கரு கலைந்து விட்டது.

இதையடுத்து உன்னுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்று நவீன்ராஜ் கூறி, சங்கீதபிரியாவை கீழ்புவனகிரி லிங்கபைரவர் நகரில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து சங்கீதபிரியா புவனகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நவீன்ராஜ், அவருடைய தந்தை ஜெயபால், தாய் சகிலா, தங்கை வினோதினி, தம்பி கேசவராஜ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story