கடல் கொந்தளிப்பால் விசைப்படகு மூழ்கி கடலில் தத்தளித்த மண்டபம் மீனவர்கள் இலங்கை கடற்படை மீட்டு கொண்டு சென்றது


கடல் கொந்தளிப்பால் விசைப்படகு மூழ்கி கடலில் தத்தளித்த மண்டபம் மீனவர்கள் இலங்கை கடற்படை மீட்டு கொண்டு சென்றது
x
தினத்தந்தி 2 Sept 2019 4:00 AM IST (Updated: 1 Sept 2019 8:30 PM IST)
t-max-icont-min-icon

பலத்த சூறாவளிக் காற்று, கடல் கொந்தளிப்பால் கச்சத்தீவு அருகே மண்டபத்தை சேர்ந்த விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில் கடலில் தத்தளித்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை மீட்டு அழைத்துச் சென்றது.

பனைக்குளம்,

ராமேசுவரம் அருகே மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 400–க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் மண்டபத்தைச் சேர்ந்த பொன்னழகு (வயது 55) என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் பொன்னழகு, சுகுமார்(40), கணேசன்(55), முருகன்(33) ஆகிய 4 பேரும் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக அந்த படகானது கடலில் மூழ்கியது. படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கடலில் உயிருக்கு போராடி தத்தளித்து கொண்டிருந்த மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேரையும் காப்பாற்றி ரோந்து படகில் ஏற்றி காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மண்டபம் மீன்துறை அதிகாரிகளுக்கும் தகவல் வந்துள்ளது. இலங்கை கடற்படை வசம் உள்ள மண்டபம் மீனவர்கள் 4 பேரையும் உடனடியாக மீட்டு கொண்டு வர வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூழ்கிய படகானது கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியிலேயே கிடப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Next Story