திருமண ஏற்பாடுகளை முடித்துவிட்டு சென்றபோது ஆட்டோ மீது பஸ் மோதி 2 பேர் பலி மேலும் 4 பேர் படுகாயம்


திருமண ஏற்பாடுகளை முடித்துவிட்டு சென்றபோது ஆட்டோ மீது பஸ் மோதி 2 பேர் பலி மேலும் 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:30 AM IST (Updated: 1 Sept 2019 10:55 PM IST)
t-max-icont-min-icon

மணப்பாறையில் திருமண ஏற்பாடுகளை முடித்துவிட்டு ஆட்டோவில் சென்றபோது, ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூரை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 55). இவரது தங்கை முனியம்மாள்(50). இவர்களின் அண்ணன் மகன் திருமணம் நேற்று மணப்பாறையில் நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் திருமண மண்டபத்தில் அதற்கான ஏற்பாடுகளை கண்ணம்மாள், முனியம்மாள் மற்றும் முனியம்மாளின் மகன் தமிழரசு (25), மகள் சத்தியபாரதி (22) ஆகியோர் முடித்து விட்டு குளித்து விட்டு வருவதற்காக ஒரு ஆட்டோவில் செவலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஆட்டோவை, வாகைக் குளம் பகுதியை சேர்ந்த மகபூப்பாட்சா (25) என்பவர் ஓட்டினார். அவருடன் வெங்கடேஷ் (43) என்பவரும் உடன் சென்றார். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செவலூர் பிரிவு சாலையை ஆட்டோ டிரைவர் கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற ஆம்னி பஸ் ஆட்டோ மீது மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 6 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கண்ணம்மாளும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெங்கடேசும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆட்டோ டிரைவர் குடிபோதையில் இருந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

Next Story