முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை டி.டி.வி.தினகரன் பேட்டி


முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 1 Sep 2019 11:15 PM GMT (Updated: 1 Sep 2019 5:37 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

திருச்சி,

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்கிற முறையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அரசியல் கட்சியை சார்ந்தவர்களை கவர்னராக நியமிப்பது சரியான நடவடிக்கை இல்லை. இதற்கு மேல் இதனை சர்ச்சையாக்க விரும்பவில்லை.

உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. அதில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் ஓரளவுக்கு பரவாயில்லை. இத்தகைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் தமிழகத்துக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை. எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாங்க என்று சொல்வது போல் தான் அவரது வெளிநாட்டு பயணம் இருக்கிறது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலில் நிர்வாகிகள், தொண்டர்கள் விழுந்து ஆசி பெறுவது உணர்வு பூர்வமானது. அவர் மீது வைத்த மரியாதைக்காக அப்படி செய்தனர். மேலும், அது இயற்கையாக இருந்தது. இப்போது எடப்பாடி பழனிசாமி காலில் சிலர் விழுவது செயற்கையாக உள்ளது. அ.ம.மு.க. கட்சி வளர்ச்சிக்காக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தங்க.தமிழ்செல்வன் அ.ம.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார். தற்போது தி.மு.க.வில் அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கி உள்ளனர். இனிமேலாவது அவர் இரவு 11 மணிக்கு மேல் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story