கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Sep 2019 11:00 PM GMT (Updated: 1 Sep 2019 7:05 PM GMT)

வேளாங்கண்ணி அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி,

டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான கீழையூர் ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்தும், தண்ணீர் திறந்து விடக்கோரியும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகை கடைத்தெருவில் அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகையன் முன்னிலை வகித்தார். மாநில விவசாய சங்க தலைவர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தூர்வாரும் பணி

மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும். குளங்கள், ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் தூர்வாரும் பணிகளை நிறுத்திவிட்டு, சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் பால்சாமி, ராமலிங்கம், ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர் பி.ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story