கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி விதை நெல்லை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி விதை நெல்லை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:30 AM IST (Updated: 2 Sept 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி பட்டுக்கோட்டையில் விதை நெல்லை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை,

காலதாமதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியை கைவிட்டு கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலை காந்தி சிலை அருகே விவ சாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் செல்வம், ஒன்றிய செயலாளர் கந்தசாமி, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சுந்தரபாண்டியன், ஒன்றிய தலைவர் மோரிஸ்அண்ணாதுரை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெஞ்சமின், ஜீவானந்தம், கே.கிருஷ்ணமூர்த்தி, சு.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கைகளில் விதை நெல்லை ஏந்தியபடி நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அலட்சியமான முறையில் காலதாமதமாக மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளை கைவிட வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடவேண்டும். கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வேண்டும்.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகளில் நகைகளை ஏலம் விடுவதை ஒத்தி வைக்க வேண்டும். சம்பா தொகுப்பு திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

Next Story