அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எதிரொலி: அரும்பார்த்தபுரம் மேம்பால பணிகள் மீண்டும் தொடக்கம்


அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எதிரொலி: அரும்பார்த்தபுரம் மேம்பால பணிகள் மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 2 Sept 2019 3:45 AM IST (Updated: 2 Sept 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்து அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பால பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வில்லியனூர்,

புதுவை - விழுப்புரம் சாலையில் அரும்பார்த்தபுரத்தில் ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இங்கு ரெயில்வேகேட் மூடப்படும் போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் அந்த பகுதி மக்களும் அவதி அடைந்து வந்தனர்.

எனவே போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வாக அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் ரூ.30 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் மற்றும் இணைப்பு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதற்காக கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின. பணிகளை அப்போதைய மத்திய மந்திரி மல்லிகார்ஜுன கார்கே தொடங்கிவைத்தார். அதன் பின்னர் மேம்பாலம் கட்டும் பணிகளுக்காக அந்த பகுதியில் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

புதுவை- விழுப்புரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மூலக்குளம், பொறையூர், குரும்பாபேட் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்த வழித்தடம் சுற்றுப்பாதை என்பதாலும், சாலைகள் மோசமாக இருப்பதாலும் புதுவை - விழுப்புரம் இடையே சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு 1½ மணி நேரமாகிறது. இருந்தபோதும் இந்த வழியாகத்தான் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

கடந்த ரங்கசாமி ஆட்சியின் போது தொடங்கப்பட்ட அரும்பார்த்தபுரம் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தன. 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சராக நாராயணசாமி பதவி ஏற்றார். அப்போது அவர் 9 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் கட்டுமானப் பணிகள் தொடங்கி 5 ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும் மேம்பால பணிகள் இன்னமும் முடிவடையவில்லை.

பாலம் கட்டுவதற்காக கையகப்பட்ட இடத்துக்கு போதுமான இழப்பீடு வழங்காததுதான் இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதுகுறித்து நில உரிமையாளர்கள் 2 பேர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்க கோர்ட்டும் உத்தரவிட்டது. ஆனாலும் இழப்பீடு வழங்கப்படாமல் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து கொண்டு இருந்தது. இந்த பிரச்சினை காரணமாக மேம்பால பணிகள் முடங்கியது.

இந்த பிரச்சினை காரணமாக, ஜி.என்.பாளையத்தை சேர்ந்த மக்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல 2 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதேபோல் அரும்பார்த்தபுரம், நடராஜன் நகர், வெங்கடேஸ்வரா நகர், ரங்கசாமி நகர், வி.மணவெளி, திருவேணிநகர், பாரதிதாசன் நகர், ஆறுமுகம் நகர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் புதுவைக்கு வரவேண்டும் என்றால் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

அதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். போதுமான இழப்பீடு தொகையை 2 மாதங்களில் பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார். அதனை நிலத்தின் உரிமையாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து பாதியிலேயே நின்ற மேம்பால கட்டுமான பணிகள் நேற்றுக்காலை மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அதிகாரிகளிடம், மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டார்.

இது குறித்து அவர் கூறும்போது, “இந்த மேம்பால பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றார்.

Next Story