ஆசிரமவாசியிடம் நூதனமுறையில் ரூ.42 லட்சம் மோசடி - 2 பேருக்கு வலைவீச்சு


ஆசிரமவாசியிடம் நூதனமுறையில் ரூ.42 லட்சம் மோசடி - 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Sept 2019 4:00 AM IST (Updated: 2 Sept 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

புதுவை ஆசிரமவாசியிடம் நூதனமுறையில் ரூ.42 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

வட மாநிலத்தைச் சேர்ந்தவர் அமுல்ஜெயின் (வயது 36). பி.டெக்., பட்டதாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுவைக்கு வந்தார். அவர் தனது குடும்ப சொத்தை புதுச்சேரி ஆசிரமத்திற்கு கொடுத்துவிட்டு ஆசிரமவாசியானார். தற்போது முத்தியால்பேட்டை வைத்திக்குப்பத்தில் உள்ள ஆசிரம குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இமெயில் மூலம் அசோக் பாண்டே, ரூஸ் தேயர் என்பவர்கள் அமுல் ஜெயினை தொடர்பு கொண்டு, தங்களை வங்கி அதிகாரிகள் என்று அறிமுகம் செய்துகொண்டனர்.

அவர்கள், அமுல்ஜெயினிடம் உங்களுடைய பெயரில் உங்களை போலவே உருவ ஒற்றுமை உடைய ஒருவர் வெளிநாட்டில் வாழ்ந்து வந்தார். அவர் தற்போது இறந்து விட்டதால், அவருடைய பெயரில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை உங்கள் பெயரில் மாற்றி அதனை விற்று பணத்தை எடுத்து கொள்ளலாம். எங்களுக்கு கமிஷன் மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறி ஆசை காட்டினர்.

மேலும் செல்போன் மூலமும் அவரை தொடர்பு கொண்டு பேசினர். இதனை உண்மை என்று நம்பிய அமுல் ஜெயின் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் கேட்டபடி புகைப்படும் மற்றும் ஆவணங்களை அனுப்பி வைத்தார். பின்னர் அவர்கள் அமுல்ஜெயினிடம் தொடர்பு கொண்டு, ஆவணங்களை மாற்றுவதற்கும் மட்டும் இதுவரை ரூ.42 லட்சம் செலவாகி உள்ளது. அதை மட்டும் அனுப்பி வையுங்கள் என்று கூறி, 6 வங்கி கணக்கு எண்களை அனுப்பி வைத்துள்ளனர். அந்த வங்கி கணக்குகள் மூலம் அமுல்ஜெயின் பல்வேறு தவணையாக மொத்தம் ரூ.42 லட்சம் அனுப்பி வைத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அதன் பின்னர் அமுல்ஜெயினை தொடர்பு கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து அமுல்ஜெயின் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. அப்போது தான் அவர்கள் 2 பேரும் சேர்ந்து தன்னிடம் நூதன முறையில் மோசடி செய்தது அமுல்ஜெயினுக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து நூதனமுறையில் மோசடி செய்த 2 பேரை வலைவீசி தேடி வருகின்றார்.

Related Tags :
Next Story