கரூரில் 286 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி


கரூரில் 286 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி
x
தினத்தந்தி 1 Sep 2019 10:30 PM GMT (Updated: 1 Sep 2019 8:19 PM GMT)

கரூரில் 286 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

கரூர்,

கரூரில் இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருப்பதையொட்டி திருமாநிலையூர் உள்ளிட்ட இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடந்தது. பொதுமக்கள் பலர் தங்களது வீட்டில் வைத்து வழிபடுவதற்காக இந்த சிலைகளை ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

இதில் கற்பக விநாயகர், வரம்தரும் விநாயகர், சித்தி விநாயகர், புலி-எலி வடிவ விநாயகர், பாகுபலி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு உருவங் களில் செய்யப்பட்டிருந்த சிலைகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் கரூர் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த போலீசாரிடம் விண்ணப்பம் செய்திருந்தனர்.

கண்காணிப்பு

இதில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலைகள் வைக்கக்கூடாது, சிலைகள் வைக்கும் அமைப்பை சேர்ந்தவர்களில் 10 பேர் அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நீர்நிலைகளை மாசுபடுத்தாத வகையில் கரைப்பதற்கு ஏதுவான சிலைகளையே வழிபாட்டிற்கு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளுக்கு உட்பட்டு, 286 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு செய்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

விநாயகர் சதுர்த்தியன்று வழிபாடு செய்யப்படும் சிலைகள் நாளை (செவ்வாய் கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) காவிரி, அமராவதி ஆறுகளில் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன. நெரூர், வாங்கல், குளித்லை உள்ளிட்ட இடங்களிலும் காவிரியாற்றிலும், சின்னதாராபுரம் உள்ளிட்ட இடங்களில் அமராவதி ஆற்றிலும் சிலைகள் கரைப்பதற்கு ஏதுவாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இந்த விதிகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story