திருட்டு சம்பவங்களை தடுக்க குளித்தலை பஸ் நிலையத்திற்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்


திருட்டு சம்பவங்களை தடுக்க குளித்தலை பஸ் நிலையத்திற்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
x
தினத்தந்தி 2 Sept 2019 3:45 AM IST (Updated: 2 Sept 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு சம்பவங்களை தடுக்க குளித்தலை பஸ் நிலையத்திற்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை,

குளித்தலை பஸ் நிலையத்தில் இருந்து குளித்தலையை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும், மணப்பாறை, முசிறி, துறையூர், சென்னை, கரூர் மற்றும் திருச்சி மார்க்கமாகவும் தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் ஏராளமான பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

குளித்தலை பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களில் செல்ல பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என பஸ்சில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

திருட்டு சம்பவங்கள்

இதில் குளித்தலையை சுற்றியுள்ள பல கிராமப்பகுதி வழியாக இயக்கப்படும் பஸ்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், சில குறிப்பிட்ட ஊர் வழியாக செல்லும் டவுன் பஸ்கள் குளித்தலை பஸ்நிலையத்திற்குள் வரும்போது, அந்த பஸ்சில் செல்ல வேண்டிய பயணிகள், முண்டியடித்துக்கொண்டு கூட்டமாக அந்த பஸ்சில் ஏற முயற்சிக்கின்றனர். அப்போது குளித்தலை பஸ் நிலையத்திற்குள் சுற்றித்திரியும் திருட்டு கும்பல், இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு பஸ்சில் ஏறமுயற்சிப்பவர்கள் பையில் வைத்துள்ள பொருட்களை திருடிச்சென்று விடுகின்றனர்.

இந்த திருட்டு கும்பல் பெண்களுடன் ஒன்றாக பஸ்சில் பயணம் செய்து, அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து அப்பெண்கள் வைத்துள்ள நகை, பணம், செல்போன் ஆகிய பொருட்களை திருடிச்சென்று விடுகின்றனர். பல மாதங்களுக்கு முன்பு அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் வைத்திருந்த நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். மேலும் பஸ் நிலையத்தில் கூட்டம் இல்லாத நேரங்களில் அங்கு அமர்ந்துள்ள வயதான மூதாட்டிகளிடம் பேச்சு கொடுத்து, தங்களை அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள்போல் காட்டிக்கொண்டு அவர்களை ஏமாற்றி நகைகளை திருடிச்சென்ற சம்பவமும் நடந்துள்ளது. பெரும்பாலும் பெண்கள் சிலரே திருட்டு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

கண்காணிப்பு கேமராக்கள்

மேலும் பஸ்சில் பயணம் செய்வதுபோல் மர்மநபர் ஒருவர், அந்த பஸ்சின் கண்டக்டர் பையில் வைத்திருந்த பணத்தை திருடிச்சென்ற சம்பவமும் நடந்துள்ளது. தொடர் திருட்டு சம்பவங்கள் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பயணிகள் கூட்டமாக இருக்கும் நேரங்களில் பஸ்நிலையத்திற்குள் போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் போலீசார் இல்லாத நேரங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் திருட்டு கும்பல் பலரிடம் தங்களின் கைவரிசையை காட்டுகின்றனர்.

இந்த பஸ்நிலையத்தின் முகப்பு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் நடைபெறும் காட்சிகள் மட்டுமே அதில் பதிவாகிறது. எனவே குளித்தலை பஸ் நிலையத்திற்குள் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்க, இந்த பஸ் நிலையத்திற்குள்ளும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story