மன்னார் வளைகுடா கடல் பகுதியில் டால்பின், கடல் பசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


மன்னார் வளைகுடா கடல் பகுதியில் டால்பின், கடல் பசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 Sept 2019 4:15 AM IST (Updated: 2 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

மன்னார் வளைகுடாவை உள்ளடங்கியிருக்கும் கடல் பகுதியில் அரிய வகை உயிரினமான டால்பின், ஆவுளியா என்றழைக்கப்படும் கடல் பசுக்கள் வேட்டையாடுவது குறைந்து இந்த வகை கடல் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

கீழக்கரை,

21 மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றிலும் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்கள் வசிக்கின்றன. குறிப்பாக பாலூட்டி இனங்களை சேர்ந்த ஆவுளியா என்று அழைக்கப்படும் கடல் பசு, ஓங்கில், என்று அழைக்கப்படும் டால்பின்கள் அதிகமாக இந்த பகுதியில் காணப்படுகின்றன.ஆவுளியா என்று அழைக்கப்படும் கடல் பசு என்பது கடலில் மீன் பிடி பகுதிகளில் காணப்படும் தாவரங்களைத்தின்று வாழும் ஒரு உயிரினம் ஆகும்.

இதன் இறைச்சி ருசி காரணமாக சர்வதேச சந்தையில் கிராக்கி அதிகம். இவற்றின் பற்களைப் பொடி செய்து விச முறிவுக்கான மருந்தும், தலை மற்றும் உடலில் இருந்து தலைவலி தைலமும், துடுப்புகளிலிருந்து மலச்சிக்கல் மருந்தும் தயாரிக்கின்றனர். தோலை உரித்து செருப்பு செய்கின்றனர்.

கடல் பசுக்கள் அலைகளற்ற அமைதியான கடலில் வாழ்வதாலும், அடிக்கடி கரையோரம் வருவதாலும் வேட்டையாடுவது எளிதாகும் இவை 400 கிலோ வரை எடை இருக்கும்.

அதே போன்று ஓங்கில் எனப்படும் டால்பின்கள் கீழக்கரை அருகே மங்களேஸ்வரி நகர் கடல் பகுதி, மண்டபம், குருசடை தீவு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி துள்ளி குதிப்பதை காண முடிகிறது. பாலூட்டி வகையை சேர்ந்த இவை பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரினங்களின் முதல் இடத்தில் உள்ளது.

கடலில் 20 மீட்டர் ஆழத்திற்கு மேல் உள்ள பகுதிகளுக்கு செல்லாது. டால்பின் 23 முதல் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. ஆண்டுக்கு ஒரு குட்டி இடும். எப்போதாவது வெகு அரிதாக 2 அல்லது மூன்று குட்டிகள் இடும். இவ்வகை டால்பின் துள்ளி குதிப்பதை காண சர்வதேச அளவில் ரசிகர்கள் உள்ளனர்.மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு காலத்தில் கடல் பசுக்கள் அதிகம் வாழ்ந்தன. பின்னர் அதிக அளவில் பிடிக்கப்பட்டு வெகுவாக குறைந்தது.

அரசு தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் வேட்டையாடப்படுவது வெகுவாக குறைந்துள்ளது.

இது குறித்து கீழக்கரை வனத்துறை அதிகாரி சிக்கந்தர் பாஷா கூறுகையில், மன்னார் வளைகுடா பகுதியில் ஆவுளியா எனப்படும் கடல் பசு மற்றும் டால்பின்கள் அதிகம் இருப்பது உண்மை.

இவ்வகை அரிய கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது இவ்வகை உயிரினங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வகை உயிரினங்களின் வளர்ச்சி மேலும் அதிகரிக்க அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

Next Story