“நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்” ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
“நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்“ என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
வாசுதேவநல்லூர்,
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவலில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் விடுதலைக்கு முதல் விதையை விதைத்தவர் பூலித்தேவன். வேலூர் சிப்பாய் கலகத்துக்கு முன்பே வெள்ளையர்களையும், நவாப்களையும் எதிர்த்து போரிட்டவர். அவருக்கு உதவியாக ஆதிதிராவிட மக்களும் இருந்து உள்ளனர் என்பதை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். பூலித்தேவனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்பிறகு ஆண்டுதோறும் இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாடி வருகிறோம்.
தமிழக முதல்-அமைச்சரின் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் செய்கின்ற விமர்சனங்களுக்கு முதல்- அமைச்சர் ஏற்கனவே சரியான விளக்கம் அளித்து விட்டார். அதன்பிறகும் எதிர்க்கட்சிகள் குறை கூறுவது கீழ்த்தரமான அரசியலாகும். முதல்-அமைச்சர் விளக்கம் கொடுத்த பிறகும் மு.க.ஸ்டாலின் வேண்டும் என்றே திரும்ப திரும்ப வெளிநாடு பயணம் குறித்து குறை கூறி கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். இந்த அரசை பற்றி குறை கூறுவதையே அவர் வேலையாக கொண்டு உள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஜெயலலிதாவின் சொத்தை ஏழைகளுக்கு வழங்குவது குறித்து நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்த பிறகு தான் கருத்து தெரிவிக்க முடியும். சென்னை கடற்கரையில் காற்று அதிகமாக வீசுவதால் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்கள் கலைந்து கிடப்பதாக எனக்கு தகவல் வந்தது. உடனே அங்கு கொட்டகை அமைத்து மலர் அலங்காரம் செய்ய உத்தரவிட்டு உள்ளேன். தங்கதமிழ்ச்செல்வனை, தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தது குறித்து ஏற்கனவே நான் விளக்கம் அளித்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story