தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதிய பதவி: “தெலுங்கானா கவர்னராக தமிழ் பெண் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
“தெலுங்கானா கவர்னராக தமிழ் பெண் நியமனம் செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது“ என்று தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ஒரு நல்ல நிர்வாகி. ஒரு டாக்டர். தெலுங்கானாவில் ஒரு தமிழ் பெண் கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பது தமிழகத்துக்கு பெருமை. அவர் தூத்துக்குடியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு நாங்கள் ஓட்டு கேட்டோம். கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழக பா.ஜனதா தலைவராக பதவி வகித்துள்ளார். அப்போது ஜெயலலிதா, தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு இந்த கவர்னர் பதவி வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்னையில் இருந்து தமிழக அரசு சார்பில் தென்மாவட்டங்களுக்கு அதிகப்படியான பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டால் அரசுக்கு தெரியப்படுத்தலாம். கண்டிப்பாக போக்குவரத்து துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கான உரிமமும் ரத்து செய்யப்படலாம்.
வங்கிகள் இணைப்பு என்பது மத்திய அரசின் நடவடிக்கை ஆகும். இதனால் பொதுமக்கள் மத்தியில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் வங்கி ஊழியர்கள் மத்தியில் பாதிப்பு உள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது தான் அதன் தாக்கம் முழுமையாக தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story