குமரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 37,950 பேர் எழுதினர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு


குமரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 37,950 பேர் எழுதினர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு
x
தினத்தந்தி 1 Sep 2019 11:00 PM GMT (Updated: 1 Sep 2019 8:43 PM GMT)

குமரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 37,950 பேர் எழுதினார்கள். தேர்வு மையத்தை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-4 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. அதேபோல குமரி மாவட்டத்திலும் தேர்வு நடந்தது. தேர்வு எழுத 45 ஆயிரத்து 545 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்காக நாகர்கோவிலில் 56 தேர்வு மையங்களும், கன்னியாகுமரியில் 9 மையங்களும், குழித்துறையில் 46 மையங்களும், தக்கலையில் 34 மையங்களும், தோவாளையில் 4 மையங்களுமாக மொத்தம் 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

பலத்த பாதுகாப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அதற்கு முன்னதாகவே ஏராளமான ஆண்களும், பெண்களும் தேர்வு மையத்துக்கு வந்து காத்திருந்தனர். பல பெண்கள் தங்களது கைக்குழந்தைகளோடு வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத செல்லும்போது கணவர் மற்றும் உறவினர்களிடம் குழந்தைகளை கொடுத்துவிட்டு தேர்வு அறைக்கு சென்றனர். தேர்வுக்கூடத்தில் அனைவரும் சோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறைக்குள் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்வர்கள் பலர் அவற்றை அங்குள்ள ஒரு அறையில் வைத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றார்கள்.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது. குமரி மாவட்டத்தில் தேர்வு எழுத 45 ஆயிரத்து 545 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 37 ஆயிரத்து 950 பேர் தேர்வு எழுதினர். 7 ஆயிரத்து 595 பேர் தேர்வு எழுத வரவில்லை.

149 தேர்வு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். 23 நடமாடும் குழுக்களைச் சேர்ந்தவர்களும், 19 பறக்கும் படைகளைச் சேர்ந்தவர்களும் தேர்வை கண்காணித்தனர். ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஒரு ஆய்வு அலுவலர் வீதம் 149 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள். தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவது வீடியோவில் பதிவு செய்து கண்காணிக்க வீடியோகிராபர் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

வீடியோ கிராபர்கள்

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று (நேற்று) நடத்தும் குரூப்-4 தேர்வுக்காக குமரி மாவட்டத்தில் 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 37,950 பேர் தேர்வு எழுதினர். அதில் 6 மையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு வீடியோ கிராபரும், 1,000-க்கு மேற்பட்ட நபர்கள் உள்ள தேர்வு மையங்களுக்கு 2 வீடியோ கிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நமது மாவட்டத்தில் அதிகமான நபர்கள் இந்த தேர்வில் பங்கேற்றுள்ளனர். அதிக நபர்கள் தேர்வில் தேர்ச்சிபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

Next Story