பிறப்பு-இறப்பு சான்றிதழை கட்டணமின்றி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் -கலெக்டர் தகவல்


பிறப்பு-இறப்பு சான்றிதழை கட்டணமின்றி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் -கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:30 AM IST (Updated: 2 Sept 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

பிறப்பு-இறப்பு சான்றிதழை கட்டணமின்றி இணையதளத்தில் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யலாம் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல், 

தமிழ்நாடு முழுவதும் 1.1.2018 முதல் அனைத்து பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளும் http://crstn.org எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்த இணையதளத்தில் பொதுமக்கள் கட்டணம் இல்லாமல் சான்றிதழ்களை எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும், பதிவிறக்கம் செய்யலாம். இதற் காக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வதற்கு, தனியாக ரகசிய குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

அதை பயன்படுத்தி பதிவு செய்யப்படும் பிறப்பு-இறப்பு தகவல்கள் சம்பந்தப்பட்ட பதிவாளருக்கு அனுப்பி சரிபார்க்கப்படும். அதன்பின்னர் இணையதளத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படும். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை, தாய் மற்றும் குழந்தை வீட்டுக்கு செல்லும் முன்பே அங்குள்ள மையத்தில் பெறலாம்.

இதற்காக அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு செல்லும் பெண்கள், கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவுசெய்த 12 இலக்க எண்கள் கொண்ட பேறுசார் மற்றும் குழந்தை நல அடையாள எண், ஆதார் எண், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

அதேபோல் வீடுகளில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்புகள் குறித்த தகவல்களை அந்த பகுதி பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் தெரிவித்து பதிவு செய்யலாம். இணையதளத்தில் ரகசிய குறியீடு இடம்பெற்ற சான்றிதழ் மட்டுமே செல்லத்தக்கது ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story