பா.ஜனதா தனது கதவை முழுமையாக திறந்தால், எதிர்க்கட்சிகளில் சரத்பவார், பிரிதிவிராஜ் சவான் தவிர யாரும் இருக்கமாட்டார்கள்


பா.ஜனதா தனது கதவை முழுமையாக திறந்தால், எதிர்க்கட்சிகளில் சரத்பவார், பிரிதிவிராஜ் சவான் தவிர யாரும் இருக்கமாட்டார்கள்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:00 AM IST (Updated: 2 Sept 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தனது கதவை முழுமையாக திறந்தால் எதிர்க்கட்சிகளில் சரத்பவார், பிரிதிவிராஜ் சவான் தவிர யாரும் இருக்கமாட்டார்கள் என நேற்று மராட்டியம் வந்த அமித்ஷா கூறினார்.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற அக்டோபரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். பா.ஜனதாவை சேர்ந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மக்களை சந்திக்கும் வகையில் மாநிலம் தழுவிய ரத யாத்திரையை கடந்த 1-ந் தேதி அமராவதி மாவட்டத்தில் தொடங்கினார்.

மகாஜனதேஷ் என பெயரிடப்பட்ட யாத்திரை மராட்டியத்தில் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்டு சிறிது நாட்கள் நிறுத்து வைக்கப்பட்டபோதிலும் மொத்தம் 4 ஆயிரத்து 384 கி.மீ. தூரத்துக்கு சுற்றுப்பயணம் செய்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பிரசாரத்தை நேற்று சோலாப்பூரில் நிறைவு செய்தார்.

இந்த நிலையில் ரதயாத்திரையின் கடைசி நாளான நேற்று சோலாப்பூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேரில் கலந்துகொண்டு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா மராட்டிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்ததுடன், தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகளில் இணைந்து வருவது குறித்தும் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “பா.ஜனதா தனது கதவை முழுவதுமாக திறந்தால், சரத் பவார் மற்றும் பிரிதிவிராஜ் சவான் தவிர, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் யாரும் இருக்க மாட்டார்கள்” என்றார்.

நேற்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story