அந்தேரியில், சிறுமியை கர்ப்பமாக்கிய கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை - செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
அந்தேரியில் சிறுமியை கர்ப்பமாக்கிய கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் முகமது அன்சாரி. கடைக்காரர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்து உள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானாள்.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் டி.என். நகர்போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அன்சாரியை கைது செய்தனர். மேலும் அவர் மீது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையே சிறுமியின் வயிற்றில் வளர்ந்த கரு கலைக்கப்பட்டது. மரபணு பரிசோதனை அறிக்கை மூலம் முகமது அன்சாரி தான் சிறுமியை கற்பழித்து இருந்தது கோர்ட்டில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அப்போது குற்றவாளி முகமது அன்சாரிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story