வேலூர் மாவட்டத்தில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது
விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாவட்டத்தில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
வேலூர்,
இந்து பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையான விநாயகர் சதுர்த்திவிழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. முக்கிய இடங்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இதற்காக வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சம் 10 அடி உயரத்தில் பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்து முன்னணி சார்பில் 1,500 விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. இவைகள் தவிர பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்படுகிறது. இதனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சிலைகள் அனைத்தும் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்படும். தொடர்ந்து 3 நாட்கள் பூஜைக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும். அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. சத்துவாச்சாரியில் இருந்து தொடங்கும் ஊர்வலம் காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மெயின்பஜார், கிருபானந்தவாரியார் சாலை, மண்டித்தெரு, கோட்டை சுற்றுச்சாலை வழியாக சென்று சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.
இதற்காக மாநகராட்சி சார்பில் சதுப்பேரி ஏரியில் தடுப்புகள் அமைக்கப்படுகிறது. சிலைகளை கரைப்பதற்கு 2 கிரேன்கள் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவக்குழுவும் அமைக்கப்படுகிறது.
விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
Related Tags :
Next Story