குரூப்-4 தேர்வை 48,112 பேர் எழுதினர் - கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் குரூப்-4 தேர்வை 48,112 பேர் எழுதினர். தேர்வு மையத்தை கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் நேற்று குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 54,744 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வை கண்காணிக்க துணை கலெக்டர் நிலையில் 16 பறக்கும் படை, பல்வேறு துறைகளை சார்ந்த 178 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வை 48 ஆயிரத்து 112 பேர் எழுதினர். 6 ஆயிரத்து 632 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு பணியில் 178 முதன்மை கண்காணிப்பாளர்களும், 36 மொபைல் குழுக்களும், 178 வீடியோ கிராபர்களும் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்வர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கண் பார்வையற்றவர்கள் தேர்வு எழுத உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
கண்ணமங்கலத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் பார்வையிட்டார்.
தேர்வு எழுத திருமணமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்களது உறவினர்கள், கணவர்கள் கைக்குழந்தைகளுடன் வெளியே காத்திருந்தனர்.
Related Tags :
Next Story