வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கு கைபேசி செயலி மூலம் ஏற்பாடு - கலெக்டர் தொடங்கி வைத்தார்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கு கைபேசி செயலி மூலம் ஏற்பாடு - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Sep 2019 10:45 PM GMT (Updated: 1 Sep 2019 11:02 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கு கைபேசி செயலி மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

சேலம், 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 2020-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை வாக்காளர்களே சரிபார்த்து அதனை உறுதி செய்யும் விதமாகவும், அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதனை மேற்கொள்ள வசதியாக “வாக்காளர் சரிபார்ப்பு திட்டம்”1.9.2019 முதல் 30.9.2019 வரை நடைபெறுகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் உள்ள தனது பெயர், வயது, உறவினர் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ள வேணடுமானால் அவரவரே மேற்படி திருத்தங்களை மேற்கொள்ள கைபேசி செயலி மூலம் தவறுகளை வாக்காளர்கள் திருத்திக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது.

இந்த பணிகள் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த காலக்கட்டத்தில் வழங்கப்படும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்த்து திருத்தி கொள்ள ஏதுவாக பிரத்யேக செயலியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சேலம் உதவி கலெக்டர் துரை, தாசில்தார் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ராமன் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் அவர் வசம் உள்ள ஆன்ட்ராய்டு கைபேசி மூலம் அவர்களது குடும்பத்தாரின் விவரங்களை சரிபார்த்து, பெயர், உறவினர் பெயர், பாலினம், வயது, வீட்டு எண், முகவரி, புகைப்படங்கள் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய இருந்தால் அவைகளை செய்து கொள்ளலாம். இந்த வசதி “ www.nvsp.in ” என்ற இனையதளத்தின் மூலமாகவும், “ vot-er He-l-p-l-i-ne ” என்ற கைபேசி செயலி மூலமாகவும் வருகிற 30-ந் தேதி வரை மேற்கொள்ளலாம்.

மேலும் கணிணி மற்றும் கைபேசி வசதி இல்லாதவர்கள் கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ளவர்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று சரிபார்த்து மேற்படி விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான 5 வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையங்களிலும் இந்த பணிகளை மேற்கொள்ளலாம். தங்கள் பாகத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் நேரடியாக மனுக்கள் அளிக்கலாம். இணையதளம் மூலமாகவும், கைபேசி செயலி மூலமாகவும், அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அதை வீட்டுக்கு வந்து சரிபார்ப்பார்கள். அது சரியாக இருப்பின் வாக்காளர் பட்டியலில் மேற்படி திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் இதனை பயன்படுத்தி கொண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது விவரங்களை சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story