கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை


கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Sep 2019 9:30 PM GMT (Updated: 2 Sep 2019 3:45 PM GMT)

கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தாளமுத்துநகர் போலீசார் லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த பாத்திமா என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், மதுரையில் உள்ள பிரபல கஞ்சா வியாபாரியான பஞ்சவர்ணம் (வயது 65) என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி தூத்துக்குடி நகர் பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து தூத்துக்குடி நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் உத்தரவின் பேரில், வடபாகம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலா தலைமையில் தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் தாமரை செல்வி, தலைமை பெண் காவலர் ரெசிகா, காவலர் பாலகுமரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் மதுரைக்கு சென்றனர்.

அவர்கள் கரிமேடு மீன்மார்க்கெட் பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ரூ.6 ஆயிரத்துக்கு வாங்கும் கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக பிரித்து தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரத்துக்கு விற்று வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் இதில் தொடர்புடைய மதுரை பெத்தனியாபுரத்தை சேர்ந்த சிவசாமி மனைவி கருப்பாயி (49), தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த மாரிசெல்வம்(20), முத்துகுமார்(20) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பஞ்சவர்ணம் மீது தூத்துக்குடி வடபாகம், மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட கஞ்சா விற்பனை வழக்குகள் உள்ளன.

Next Story