குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி,
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து நன்றாக உள்ளது. சீசன் காலம் முடிந்த பின்னரும், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியத்துக்கு மேல் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மெயின் அருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. பின்னர் சிறிது நேரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் குளிப்பது ஆபத்து என்பதால், அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றி, குளிக்க தடை விதித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து புறப்பட்டு பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளுக்கு சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதேபோல் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம் -10, சேர்வலாறு -4, மணிமுத்தாறு-2, கடனா -2, கருப்பாநதி -2.5, குண்டாறு -42, அடவிநயினார் -15, ராதாபுரம் -5.30, செங்கோட்டை -18, தென்காசி -3.
Related Tags :
Next Story