உள்ளாட்சி தேர்தலில் ச.ம.க. போட்டியிடும் - சரத்குமார் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று அந்த கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கூறினார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை,
தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டது தமிழகத்திற்கு பெருமை. வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை சந்தித்த அவருக்கு உயர் பதவி கிடைத்துள்ளது. தமிழனாக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு எங்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தியாவில் பொருளாதார மந்தநிலை படிப்படியாக சீராகும் என்ற நம்பிக்கை உள்ளது. சீர்திருத்த நடவடிக்கைகள் உடனே பலனளிக்காது. காத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் வங்கிகள் இணைப்பு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக உள்ளது.
ஏற்கனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றை இணைக்க முயற்சி செய்தார்கள். இப்போது பொதுத்துறை வங்கிகளை இணைத்திருப்பதால் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எனவே ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது தமிழ்நாட்டின் நலனுக்காகத்தான். மு.க.ஸ்டாலின் முன்பு சிங்கப்பூரை போல் சென்னையை மாற்றுவேன் என்று கூறினார். அவரும் வெளி நாடுகளுக்கு சென்றார். வெளிநாட்டில் உள்ள நல்ல விஷயங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவது சரியாகத்தான் இருக்கும்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி என்பதற்காகவே விமர்சிப்பது தவறு. நல்ல விஷயங்களை பாராட்டத்தான் வேண்டும். சமத்துவ மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளது. நடிகர் சங்க தேர்தல் பிரச்சினை, தயாரிப்பாளர் சங்க பிரச்சினை எல்லாமே நல்லபடியாக முடிய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணி மண்டபத்தில், காமராஜர் வாழ்ந்த வீடு போல் மாதிரி வீடு அமைக்கப்பட உள்ளது. விரைவில் இந்த மணிமண்டபம் சுற்றுலா மையமாக திகழும். நான் சினிமாவில் நடிக்கவில்லையே என்று பலரும் கேட்கிறார்கள். இப்போது வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறேன். அந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. சமூகவலைத்தளங்களை விமர்சிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது. நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். ஒருவரைப் பற்றி தெரியாமலேயே தூரத்தில் இருந்து கொண்டு சமூகவலைத்தளங்களில் விமர்சிப்பது சரியாக இருக்காது. இவ்வாறு சரத்குமார் கூறினார்.
அப்போது கட்சி நிர்வாகிகள் அரசன் எஸ்.பொன்ராஜ், என்.சுந்தர், வி.ஆர்.வேலுமயிலு, ஏ.ஆர்.ராமகிருஷ்ணன், சி.டி.மணிகண்டன், முன்னாள் மாவட்ட செயலாளர் உபைதுரகுமான், அஸரியா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story