மாவட்ட செய்திகள்

ஆதார் புகைப்படம் எடுக்க, திருத்தம் செய்வதற்கு, டோக்கன் வாங்க விடிய, விடிய காத்திருக்கும் பொதுமக்கள் + "||" + The public is waiting for the dawn, to buy the toad, to buy the token

ஆதார் புகைப்படம் எடுக்க, திருத்தம் செய்வதற்கு, டோக்கன் வாங்க விடிய, விடிய காத்திருக்கும் பொதுமக்கள்

ஆதார் புகைப்படம் எடுக்க, திருத்தம் செய்வதற்கு, டோக்கன் வாங்க விடிய, விடிய காத்திருக்கும் பொதுமக்கள்
ஆதார் புகைப்படம் எடுக்கவும், திருத்தம் செய்வதற்கும் டோக்கன் வாங்க பொதுமக்கள் விடிய, விடிய காத்திருப்பதால் கடும் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி,

மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் பெறுவது உள்பட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். பொள்ளாச்சி பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கவும், திருத்தம் செய்யவும் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், தலைமை தபால் நிலையங்களில் ஆதார் சேர்க்கை மையம் செயல்பட்டு வந்தது.

பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. இதை பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனம் கண்காணித்து வருகின்றது. இந்த மையத்தில் ஆதார் பதிவு செய்யவும், 5 மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கு கட்டாய கைவிரல் ரேகை மறுபதிவு செய்தல் ஆகியவற்றிற்கு கட்டணம் வசூலிப்பதில்லை. புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி மாற்றம் செய்தல், ஆதார் விவரங்களை தாளில் பெறுவதற்கும், பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண் ஆகியவற்றை மாற்றம் செய்ய ஆகியவற்றிற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

பெரும்பாலும் ஆதார் அட்டையில் முகவரி, பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று தவறாக இருக்கும். இதை மாற்றம் செய்வதற்கு விதிக்கப்பட்டு உள்ள விதிமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். முகவரி மாற்றத்திற்கு இதற்கு முன் கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து வாங்கி வந்தால் போதும். ஆனால் தற்போது மக்கள் பிரநிதிகளான எம்.பி., எம்.எல்.ஏ., ஏ கிரேடு அதிகாரி ஆகியோரின் புகைப்படத்துடன் கூடிய இருப்பிட சான்றிதழ் தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

இந்த சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையில் வேறு ஏதாவது ஆவணங்களை வைத்து திருத்தம் செய்தால், பெங்களூருவில் உள்ள நிறுவனத்தினர் ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் எந்த மையத்தில் இருந்து திருத்தம் செய்யப்பட்டதோ? அந்த மையத்தின் சர்வரை நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதுபோன்ற பிரச்சினையால் பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் ஆதார் அட்டை சேர்க்கை மையம் கடந்த 2 மாதமாக செயல்படவில்லை. இதற்கிடையில் நகராட்சி அலுவலகம் மற்றும் தலைமை தபால் நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆதார் மையமும் இழுத்து மூடப்பட்டது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

வங்கி கணக்கு தொடங்குவதற்கு, கியாஸ் இணைப்பு பெறுவதற்கு, பாஸ்போர்ட்டு வாங்க, வீடு, வாங்க, விற்பனை செய்ய, தொழிலாளர் வைப்பு நிதி கணக்கு தொடங்குவதற்கு அல்லது அதில் இருந்து பணம் எடுக்க, மத்திய அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கு, தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ்கள், ரேஷன் கார்டு பெறுவதற்கு மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேருவதற்கு உள்பட அனைத்துக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு விட்டது.

தற்போது பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க கூட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை கேட்கின்றனர். அந்த அளவுக்கு ஆதார் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் ஆதார் அட்டை எடுக்கும் போது நாம் சரியான தகவல்களை கொடுத்தாலும், அந்த அட்டை வரும் போது, பெயர், முகவரி, புகைப்படம் மாறி இருக்கும். இல்லையெனில் ஏதாவது ஒரு பிழை இருக்கும். மேலும் வாடகை வீட்டில் வசித்தவர்கள், வீடு கட்டி வேறு முகவரிக்கு சென்றால் ஆதாரில் திருத்தம் செய்ய வேண்டிய இருக்கும். இதுபோன்ற தவறுகளை சரிசெய்வது மிகவும் கடினமாக உள்ளது.

முதலில் ஆதாரில் முகவரி மாற்றம் திருத்தம் செய்ய கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து வாங்கி கொடுத்தால் போதும். ஆனால் தற்போது எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் ஏ கிரேடு கெசட்டட் அதிகாரிகளிடம் புகைப்படத்துடன் கூடிய இருப்பிட சான்றிதழ் வாங்கி வர அறிவுறுத்துகின்றனர். சாதாரண மற்றும் நடுத்தர மக்களால் அவர்களிடம் கையெழுத்து வாங்குவது என்பது சாத்தியம் இல்லாதது. இதனால் ஆதாரில் திருத்தம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் வங்கியில் கணக்கு தொடங்கவோ அல்லது கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ஆதாரில் உள்ள முகவரியே, மற்ற ஆவணங்களில் இருக்க வேண்டும் என்கின்றனர்.

ஏதாவது ஒன்றில் முகவரி மாறி இருந்தால் ஏற்றுகொள்வதில்லை. வங்கிகள் முதல் பல்வேறு இடங்களில் இந்த பிரச்சினையால் மக்கள் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையத்தில் திருத்தம், புதிதாக ஆதார் எடுத்தல் உள்ளிட்டவைகளை தினமும் 40 பேருக்கு செய்து கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது சர்வர் பிரச்சினையால் கடந்த 2 மாதமாக செயல்படவில்லை. அதை தொடர்ந்து நகராட்சி அலுவலகம், தபால் நிலையங்களிலும் உள்ள ஆதார் மையங்களும் மூடப்பட்டன.

இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது பொள்ளாச்சி நகரில் சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகளில் மட்டும் தனியார் மூலம் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தினமும் 20 பேருக்கு ஆதார் புகைப்படம் எடுக்கவும், திருத்தமும் செய்யப்படுகிறது. இதற்காக கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது. இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கிகளிலும், சிட்டி யூனியன் வங்கி மையத்திற்கு வி.கே.ஆர். வீதியில் உள்ள ஒரு தனியார் கணினி மையத்திலும் டோக்கன் வழங்கப்படுகிறது.

டோக்கன் காலை 6.30 மணி முதல் 7 மணி வரை வழங்குகின்றனர். இதற்காக ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ராமபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். முதல் 20 பேருக்குள் வந்தால் மட்டுமே அன்று ஆதார் புகைப்படம் எடுக்கவோ, திருத்தம் செய்யவோ முடியும். இதற்காக சிலர்டோக்கன் வாங்க விடிய, விடிய காத்திருக்கின்றனர். முதியவர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அதிகாலையில் வரிசையில் நின்று டோக்கன் பெற்று செல்கின்றனர்.

சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருபவர்களுக்கு சில நேரங்களில் டோக்கன் கிடைப்பதில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பள்ளிகளில் கண்டிப்பாக ஆதார் எடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் ஆதார் எடுக்கவில்லை என்றால் மாற்று சான்றிதழை வாங்கி செல்லுங்கள் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் பெற்றோர்கள் வேலைக்கு செல்லாமல், குழந்தைகளுக்கு விடுமுறை போட்டு விட்டு டோக்கன் வாங்க சென்றால், அங்கு அன்றைய டோக்கன் முடிந்து விடுகிறது.

இதன் காரணமாக பெற்றோர்களுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் மனஉளைச்சல் ஏற்படுகிறது. எனவே அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆதார் மையங்களை கூடுதலாக திறக்க வேண்டும். பொள்ளாச்சியில் மூடப்பட்ட ஆதார் மையங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வகுக்கப்பட்டு உள்ள வழிமுறைகளை எளிதாக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்
ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
2. பாளையங்கோட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
பாளையங்கோட்டையில் பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. டெல்லியை நடுங்க வைக்கும் குளிர்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டெல்லியை நடுங்க வைக்கும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
4. சேலத்தில் சூரிய கிரகணத்தை ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்
சேலத்தில் சூரிய கிரகணத்தை ஆர்வத்துடன் பொதுமக்கள் பார்த்தனர்.
5. சிவகங்கை மாவட்டத்தில், சூரிய கிரகணத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி ஏராளமானோர் கிரகணத்தை கண்டு ரசித்தனர்.