ராஜபாளையம் அருகே வயலில் பெண் வெட்டிக்கொலை; அரிவாளை பறித்து தீர்த்துக்கட்டிய மர்ம மனிதன் யார்?


ராஜபாளையம் அருகே வயலில் பெண் வெட்டிக்கொலை; அரிவாளை பறித்து தீர்த்துக்கட்டிய மர்ம மனிதன் யார்?
x
தினத்தந்தி 3 Sept 2019 5:00 AM IST (Updated: 3 Sept 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் இருந்த அரிவாளை பறித்து அவரை வெட்டிக்கொன்ற மர்ம மனிதனை போலீசார் தேடிவருகிறார்கள்.

தளவாய்புரம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வடக்கு தேவதானம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வீரபாண்டி என்பவருடைய மனைவி கணபதியம்மாள்(வயது55). இவர்களுக்கு தனராஜ் (30), முனீஸ்வரன் (28)ஆகிய இரு மகன்களும், முத்துச்செல்வி (25)என்ற மகளும் இருக்கின்றனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு வீரபாண்டி இறந்து போனார்.

கணபதியம்மாளுக்கு சீலாப்பேரி கண்மாய் அருகே விவசாய நிலம் உள்ளது. பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு அவர் நேற்று மாலை சென்றார். மேலும் வயல் வேலைக்காக வீட்டில் இருந்து அரிவாளும் கொண்டு சென்றிருந்தார். இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் வயற்காட்டில் உள்ள மோட்டார் கிணறு அருகே தலையில் அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அந்தப்பக்கமாக சென்றவர்கள் இதைக்கண்டு திடுக்கிட்டு கணபதியம்மாளின் குடும்பத்தினருக்கும், சேத்தூர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் அந்த கிராமத்தினர் அங்கு திரண்டனர். சேத்தூர் போலீசார் அங்கு வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, வயற்காட்டுக்கு கொண்டு சென்றிருந்த அரிவாளை கணபதியம்மாளிடம் இருந்து மர்ம மனிதன் பிடுங்கி, அதனைக்கொண்டு அவரை வெட்டிக்கொலை செய்திருப்பது தெரியவந்தது. கொலையாளியின் அரைஞாண் கயிற்றின் ஒரு பகுதி அவரது கையில் இருந்தது. எனவே அவர் கொலையாளியுடன் கடுமையாக போராடி இருப்பதும் தெரியவந்தது.

கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. கொலையில் துப்புதுலக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனும் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டார். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. கணபதியம்மாளின் உடல் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் இதே பகுதியில் தென்காசி எம்.பி.யின் உறவினரான கருப்பையா என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அந்த பரபரப்பு அடங்கும் முன்பே விதவை பெண் கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story