டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு வினாத்தாள் தவறு கண்டனத்துக்குரியது - ஜி.கே.வாசன் பேட்டி
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் அதன் வினாத்தாளில் உள்ள தவறு கண்டனத்துக்குரியது என்று ஜி.கே.வாசன் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான முதலீடு அதிகரிக்கும். இந்த பயணம் மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதல்-அமைச்சரின் பயணத்தை விமர்சிக்க மாட்டார்கள். நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு வினாத்தாளில் குடியரசு தினம் குறித்த கேள்விக்கான விடைகள் தவறாக அச்சிடப்பட்டு இருந்தது கண்டனத்துக்குரியது.
இதுபோன்ற தவறுகள் இனி நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மெட்ரோ விவகாரத்தில் பொதுமக்களின் வசதிக்காக சில நடைமுறைகளை மாற்றினாலும் அங்குள்ள நிரந்தர பணியாளர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அல்லது மாற்றுப்பணி வழங்க வேண்டும். ப.சிதம்பரம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சி.பி.ஐ. தனது கடமையை செய்து வருகிறது. சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து கைது செய்தது அத்துறையின் உயர் அதிகாரிகளின் உத்தரவாக கூட இருக்கலாம்.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு கவர்னர் பதவி வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பெண் கவர்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதற்கு அவருடைய உழைப்பே காரணம். பா.ஜ.க. தமிழகத்தில் வளர்வதற்கு தமிழிசை சவுந்தரராஜன் தான் காரணமாக இருந்தார்.
அவரின் உழைப்புக்காக கவர்னர் பதவி வழங்கப் பட்டு உள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story