திருச்சி விமானநிலையத்தில் நின்ற மர்ம வேனால் பரபரப்பு - வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
திருச்சி விமானநிலையத்தில் நின்ற மர்ம வேனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வேனில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.
செம்பட்டு,
திருச்சி விமானநிலைய வளாகத்தில் உள்ள பார்க்கிங்கில் நேற்று முன்தினம் ஒரு வேன் ஆளில்லாமல் நீண்டநேரமாக நின்று கொண்டு இருந்தது. அந்த வேனுக்குள் லைட் எரிந்தபடி இருந்தது. இதை கண்ட சிலர் விமானநிலைய பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து பார்த்துவிட்டு அக்கம்பக்கத்தில் வேன் டிரைவர் அருகில் நிற்கிறாரா? என்று விசாரித்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக வெடிகுண்டு தடுப்புபிரிவினருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து வேன் முழுவதும் சோதனையிட்டனர். ஆனால் வேனுக்குள் எதுவும் இல்லை. இதையடுத்து விமானநிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு சென்று வேனின் கதவை திறந்து அதில் இருந்த ஆவணங்களை பார்த்தனர். அப்போது அந்த வேன் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த மில் அதிபர் வெங்கடாசலத்துக்கு சொந்தமானது என தெரியவந்தது. அந்த வேனின் டிரைவர் திண்டுக்கல் பூலாம்பட்டியை சேர்ந்த ஆசைதம்பி (37) என்பதும் தெரியவந்தது. உடனே வேன் டிரைவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
அவர் நேற்று காலை விமானநிலைய போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, வெங்கடாசலம் நேற்று முன்தினம் காலை விமானம் மூலம் சென்னை செல்வதற்காக வேனில் திருச்சி விமானநிலையம் வந்துள்ளார். அவரை இறக்கி விட்டு, விட்டு அங்கு ஆசைதம்பி காத்து இருந்தார். அப்போது அவரது மனைவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்று போன் வந்ததால் வேனை அங்கேயே நிறுத்திவிட்டு சென்று விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் எச்சரிக்கை செய்து வேனை ஒப்படைத்து அனுப்பினர். திருச்சி விமானநிலைய வளாகத்தில் மர்மமாக நின்ற வேனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story