முதுமலை, டாப்சிலிப்பில், விநாயகருக்கு பூஜை செய்த வளர்ப்பு யானைகள் - சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
விநாயகர் சதுர்த்தியையொட்டி முதுமலை முகாமில் விநாயகருக்கு யானைகள் பூஜை செய்தன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 5 பெண் யானைகள், 16 ஆண் யானைகள், 2 மக்னா யானைகள் உள்பட 23 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தெப்பக்காட்டில் உள்ள பழமை வாய்ந்த இந்த முகாமில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் விழா நடத்தப்படுகிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று மதியம் முகாமில் உள்ள 23 வளர்ப்பு யானைகளும் மாயார் ஆற்றில் குளிக்க வைக்கப்பட்டு முகாமில் உள்ள உணவு கூடத்திற்கு அழைத்து வரப்பட்டன. பின்னர் யானைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூ மாலைகள் அணிவிக்கப்பட்டன. முகாமில் உள்ள விநாயகர் கோவில் முன்பு மாலை 5.30 மணி அளவில் யானைகள் அழைத்து செல்லப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற மசினி மற்றும் கிருஷ்ணா ஆகிய 2 யானைகள் தங்களது தும்பிக்கையில் மணியை பிடித்து கொண்டு அதனை அடித்தவாறு 3 முறை கோவிலை சுற்றி வந்தன. தொடர்ந்து விநாயகருக்கு முன்பு நின்ற அந்த இரண்டு யானைகளும் மண்டி இட்டு தும்பிக்கையை உயர்த்தி விநாயகரை வணங்கி வழிபட்டன. அப்போது அங்கிருந்த மற்ற யானைகளும் தங்களது தும்பிக்கையை உயர்த்தி பிளிறின. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து யானைகளும் உணவு கூடத்திற்கு அழைத்து வரப்பட்டு ஒவ்வொரு யானைக்கும் பொங்கல், சாதம், ராகி, தேங்காய், கரும்பு, வெள்ளம், வாழைப்பழம், ஆப்பிள், அன்னாசி, மாதுளை, உப்பு, சத்துமாவு, மாத்திரைகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட சிறப்பு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், துணை கள இயக்குனர்கள் செண்பகப் பிரியா, ஸ்ரீகாந்த், வனச்சரகர்கள் தயானந்தன், மாரியப்பன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாம் வனவர் முத்துராமலிங்கம் மற்றும் வனத்துறை ஊழியர்கள், யானைகள் பாகன்கள் செய்திருந்தனர்.விநாயகர் சதுர்த்தி தினத்தில் மனிதர்கள் போலவே வளர்ப்பு யானைகளும் விநாயகரை வழிபடுவதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலையில் குவிந்திருந்தனர். இதனால் வழக்கத்தை விட முதுமலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. விநாயகரை யானைகள் வழிபட்டதை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கண்டு மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று விழாவை காண வந்த சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதுபோன்று பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் பகுதியிலும் வனத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு பூஜை நடந்தது.
இதில் அங்குள்ள வளர்ப்பு யானை முகாமில் உள்ள யானை விநாயகரை தும்பிக்கையை உயர்த்தி மண்டியிட்டு வழிபட்டது.
Related Tags :
Next Story