சம்பளம் பேச்சுவார்த்தை தோல்வி, ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர்
சம்பளம் உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அழகியபாண்டியபுரம்,
குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான தொழிற்சாலை கீரிப்பாறையில் உள்ளது. இந்த கழகத்தின்கீழ் மருதம்பாறை, மயிலார், கல்லாறு, குற்றியாறு, மணலோடை, காளிகேசம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்த தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரப்பர் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு சம்பளம் உயர்த்தப்பட வேண்டும். இதற்காக தொழிற்சங்க பிரதிநிதிகள், அதிகாரிகளை சந்தித்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கடந்த மாதம் 30-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
அதைத்தொடர்ந்து அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சம்பள பிரச்சினையை தீர்க்கக்கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக ரப்பர் பால் வெட்டுதல், ஒட்டு ரப்பர் எடுத்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக அரசு ரப்பர் கழகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story