இறால் குட்டையில் இருந்து உப்பு நீரை வெளியேற்றி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடம் அருகே இறால் குட்டையில் இருந்து உப்பு நீரை வெளியேற்றி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே நடுக்கொட்டாய்மேடு கிராமத்தில் கடந்த பல வருடங்களாக இறால் குட்டைகள் அமைத்து சிலர் இறால் வளர்த்து வருகின்றனர். இந்த குட்டைகளில் உப்பு தொடர்ந்து தேங்கி உள்ளதால் அப்பகுதியில் விளை நிலங்கள் உவர் நிலங்களாக மாறிவிட்டன என்றும் நிலத்தடி நீரும் இறால் குட்டைகளால் உப்புநீராக மாறிவருகின்றன என அதிகாரிகளுக்கு மீனவர்கள் தெரிவித்தனர். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து நடுக்கொட்டாய்மேடு மீனவ கிராம தலைவர் செல்வமணி தலைமையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீனவ குடியிருப்புகளிலிருந்து வெளியேறி சுமார் 50மீட்டர் தொலைவில் உள்ள இறால் குட்டைகளில் தேக்கி உள்ள உப்புநீரை கரையைவெட்டி அருகில் உள்ள பக்கிம்காம் கால்வாயில் வெளியேற்றினர். பின்னர் இறால்குட்டைகளை முழுவதுமாக அகற்றக்கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் மற்றும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி இறால்குட்டை உரிமையாளர் சேகர் கூறியதாவது:-
இறால் குட்டைகளில் ஏராளமான இறால் குஞ்சுகளை விட்டிருந்தோம். தற்போது கரைவெட்டப்பட்டு தண்ணீர் திடீரென வெளியேற்றப்பட்டதால் அனைத்து இறால் குஞ்சுகளும் வெளியேறிவிட்டன. இதனால் மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story