பக்கிங்காம் கால்வாய் பணியில் தொய்வு: மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு


பக்கிங்காம் கால்வாய் பணியில் தொய்வு: மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 3 Sept 2019 4:00 AM IST (Updated: 3 Sept 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் பணி கிடப்பில் போடப்பட்டதால் மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாயில் சேதமடைந்த பழைய பாலத்திற்கு மாற்றாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2010-ம் ஆண்டு ரூ.4 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

நிர்வாக குளறுபடியால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக பாலம் அமைக்கும் பணி 50 சதவீதம் முடிந்த நிலையில், கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், இப்பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

தற்போது பாலம் அமைக்கப்பட்டு ஜல்லி கற்கள் போடப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில், மீண்டும் இந்த பணி கிடப்பில் போடப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பணியால் கடந்த ஜூலை மாதம் முதல் மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் மாமல்லபுரம் வரும் அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவை மாற்று வழிப்பாதையில், அதாவது கிழக்குக்கடற்கரை சாலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் மாமல்லபுரம் நகருக்குள் சென்று சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. மேலும், தற்போது வாகன ஓட்டிகள் கருக்காத்தம்மன் கோவில் அருகில் உள்ள கட்டிமுடிக்கப்படாத குறுகிய வளைவிலான பாலத்தின் மீது ஆபத்தை உணராமல் செல்கின்றனர்.

அவ்வாறு அங்கு செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்தால் பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. பாலத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு சுற்றுலா வாகனங்கள் வந்து செல்ல வசதியாக கிடப்பில் போடப்பட்ட பாலப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். போக்குவரத்தினை விரைவில் தொடங்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story