காஞ்சீபுரம் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கைது - பணமோசடி செய்ததால் கொன்றதாக வாக்குமூலம்


காஞ்சீபுரம் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கைது - பணமோசடி செய்ததால் கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 3 Sept 2019 3:45 AM IST (Updated: 3 Sept 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த மேல் பொடவூர் கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகில் உள்ள குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தார். இதற்கிடையில் மீனாட்சி என்பவர் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்ததையடுத்து, கொலை செய்யப்பட்டவர் கட்டிட தொழிலாளி ராஜா என்பது உறுதியானது.

இதையடுத்து, கொலையாளிகளை தீவிரமாக வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில், நீர்வளூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்ற வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கட்டிட தொழிலாளி ராஜாவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

அதன் பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், கொலை செய்யப்பட்ட ராஜா பல மந்திர வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், மணிகண்டனுக்கு குழந்தை இல்லாததால், பூஜை செய்து குழந்தைவரம் பெற்று தருவதாக கூறி அவரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் மணிகண்டனுக்கு பூஜை செய்தும், எந்தவித பலனும் இல்லை என்பதால், ராஜாவால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை தெரிந்து கொண்டார். ஆனால், ராஜா மீண்டும் மணிகண்டனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வீட்டிற்கு பேய், பூதம் வரும் என்று பீதியை கிளப்பியுள்ளார்.

இதனால் கோபமடைந்த, மணிகண்டன், ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜாவை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்து விட்டு, உடலை குளத்தில் வீசியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட மணிகண்டனின் கூட்டாளிகளான நீர்வளூர் கிராமத்தை சேர்ந்த பழனி (35), கார்த்திகேயன் (30), நவீன்குமார் (30) ஆகியோர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். 4 பேரையும் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story