திருவாரூர் அருகே, கோவில் குளத்தை தூர்வாரியபோது ரூ.5 கோடி ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு
திருவாரூர் அருகே கோவில் குளத்தை தூர்வாரியபோது ரூ.5 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகள் கோவிலில் மாயமானவையா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடவாசல்,
திருவாரூர் அருகே மணக்கால் கிராமத்தில் சேஷபுரீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் கோவிலுக்கு அருகே உள்ளது. கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த குளத்தை தூர்வாரும் பணிகள் நேற்று நடந்தன.
இதையொட்டி பொக்லின் எந்திரம் மூலம் குளத்தில் இருந்து மண் அள்ளப்பட்டது. அப்போது குளத்தில் உலோகத்தால் ஆன 2 சாமி சிலைகள் புதைந்திருப்பது தெரியவந்தது. அந்த சிலைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் கவனமாக வெளியே எடுத்தனர். இதில் அந்த சிலைகள் சோமாஸ்கந்தர் மற்றும் ஒரு அம்மன் சிலை என்பது தெரியவந்தது.
சோமாஸ்கந்தர் சிலை 2 அடி உயரத்தில் பீடத்துடன் காணப்பட்டது. இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலை கிடைத்த பகுதிக்கு திரண்டு வந்து, சாமி சிலைகளுக்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, வருவாய் அலுவலர் சுபாஷினி ஆகியோர் திருவாரூர் தாசில்தாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் துணை தாசில்தார் சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து 2 சாமி சிலைகளையும் மீட்டு விசாரணை மேற்கொண்டார். அப்போது குளத்தில் கண்டெடுக்கப்பட்ட 2 சாமி சிலைகளும் ஐம்பொன்னால் ஆனது என்பது தெரிய வந்தது.
சிலைகளை அதிகாரிகள் எடை போட்டு பார்த்தனர். இதில் அவை 84 கிலோ எடை இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஐம்பொன் சிலைகள் இரண்டும் உடனடியாக திருவாரூர் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, ‘2 சாமி சிலைகளும் கடந்த 1970-ம் ஆண்டு சேஷபுரீஸ்வரர் கோவில் இருந்து காணாமல் போனவை. இதுபற்றி குடவாசல் போலீசில் புகார் அளித்துள்ளோம்’ என்றனர். குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் கோவிலில் இருந்து கடத்தப்பட்டு குளத்தில் வீசப்பட்டதா? குளத்தில் வீசியவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story