தஞ்சை அருகே ரசாயன தொழிற்சாலை முற்றுகை: 200 பேர் கைது


தஞ்சை அருகே ரசாயன தொழிற்சாலை முற்றுகை: 200 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sept 2019 3:45 AM IST (Updated: 3 Sept 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே ரசாயன தொழிற்சாலையை முற்றுகையிட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளப்பெரம்பூர், 

தஞ்சை அருகே புதுக்குடியில் தனியார் ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படவில்லை என்றும், இதன் காரணமாக விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து தொழிற் சாலையை கடந்த ஏப்ரல் மாதம் மூடினர்.

இந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஆலை நிர்வாகத்தினர் முயற்சி செய்தனர். இதுதொடர்பாக பொது மக்களுக்கும், ஆலை நிர்வாகத்தினருக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை கடந்த வாரம் பூதலூரில் நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் ஆலை நேற்று மீண்டும் திறக்கப்பட இருந்ததாக கூறப்பட்டது.

இதை அறிந்த புதுக்குடி கிராம மக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், பூதலூர் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன், செங்கிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்து, புதுக்குடியில் உள்ள சமத்துவபுரம் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் போராட்டம் தொடர்பாக 55 பேர் மீது செங்கிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

புதுக்குடியில் இயங்கி வந்த ரசாயன தொழிற்சாலையால் இப்பகுதியில் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டது. இப்பகுதியை சேர்ந்த பலருக்கும் சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மீண்டும் செயல்பட தொடங்கினால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story