கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல வசதியாக வெண்ணாற்றில் புதிய தடுப்புச்சுவர் - விவசாயிகள் மகிழ்ச்சி


கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல வசதியாக வெண்ணாற்றில் புதிய தடுப்புச்சுவர் - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 Sept 2019 3:30 AM IST (Updated: 3 Sept 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல வசதியாக வெண்ணாற்றில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருக்காட்டுப்பள்ளி, 

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிளை வாய்க்கால்கள், அதில் உள்ள மதகுகளை சீரமைக்கும் பணிகள் குடிமராமத்து திட்டத்தின்கீழ் பாசனதாரர்கள் சங்கம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல இடங்களில் இந்த பணிகள் முடிவடைந்து விட்டன. பூதலூர் தாலுகா கச்சமங்கலம் அருகே மகாதேவபுரம் கிராமத்தில் வெண்ணாற்றில் இருந்து பிரிந்து 3½ கிலோ மீட்டர் தூரம் செல்லும் சிறுவாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் இருந்து தண்ணீர் பெற்று கச்சமங்கலம், மகாதேவபுரம் ஆகிய கிராமங்களில் 300 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த வாய்க்காலில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் முழுமையாக செல்லவில்லை. இதுகுறித்து பொதுப்பணித்துறை வெண்ணாறு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் வெண்ணாறு பள்ளமாகவும், மகாதேவபுரம் வாய்க்கால் மேடாகவும் இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுவது தெரியவந்தது.

இதையடுத்து வெண்ணாற்றின் நீரோட்டத்துக்கு பாதிப்பில்லாமல் மகாதேவபுரம் வாய்க்கால் தலைப்பு பகுதியில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டி மகாதேவபுரம் வாய்க்காலுக்கு முழு அளவு தண்ணீரை கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி குடிமராமத்து திட்டத்தின்கீழ் தடுப்புச்சுவர் மற்றும் வாய்க்கால் சீரமைப்பு பணிகளுக்காக ரூ.19 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து வாய்க்கால் முழுவதும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வெண்ணாற்றில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டதால் மகாதேவபுரம் வாய்க்காலின் கடைமடை வரை தண்ணீர் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும், வெண்ணாற்றில் குறைந்த அளவில் தண்ணீர் வந்தாலும் விவசாயம் செய்ய இயலும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

Next Story