முன்விரோதத்தில் கார் டிரைவருக்கு வெட்டு - 2 பேர் கைது


முன்விரோதத்தில் கார் டிரைவருக்கு வெட்டு - 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sept 2019 3:30 AM IST (Updated: 3 Sept 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக கார் டிரைவரை கத்தியால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சிவா(வயது 29). டிரைவரான இவர், தனியார் நிறுவனத்துக்கு கார் ஓட்டி வருகிறார். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலையை அடுத்த அப்புபட்டி ஆகும்.

அதே ஊரைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). டிரைவரான இவரும், துரைப்பாக்கத்தில் தங்கி, தனியார் நிறுவனத்துக்கு கார் ஓட்டி வருகிறார். ஒரே ஊரைச்சேர்ந்த இவர்கள் இருவருக்கும் இடையே 2017-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியின்போது தகராறு ஏற்பட்டது. அப்போது கார்த்திக்கை, சிவா தாக்கியதாக தெரிகிறது.

இந்த முன்விரோதம் காரணமாக கார்த்திக், தனது நண்பர்களான முத்து (29), தாமோதரன் (29) ஆகியோருடன் சேர்ந்து சிவாவை கொலை செய்யும் நோக்கத்தில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சிட்லப்பாக்கம் சென்றார்.

அப்போது பணி முடிந்து வீட்டுக்கு வந்த சிவா, வீட்டின் வெளியே காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் செல்ல முயன்றார். அங்கு மறைந்திருந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சிவாவின் தலை, முதுகு, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

சிவாவின் அலறல் சத்தம்கேட்டு பொதுமக்கள் ஓடிவந்ததால் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் தப்பிச்சென்றனர். படுகாயம் அடந்த சிவாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிவா சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், முத்து, தாமோதரன் ஆகியோரை தேடிவந்தனர். இந்தநிலையில் கார்த்திக் மற்றும் முத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தாமோதரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story