சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு


சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Sept 2019 4:00 AM IST (Updated: 3 Sept 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய உள்நாட்டு முனையம் கார் நிறுத்தும் இடத்தில் ஒரு டிராலியில் நீண்டநேரமாக பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. நீண்டநேரம் ஆகியும் அந்த பையை யாரும் எடுக்க வராததால், அதில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது.

உடனே மத்திய தொழிற்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பகுதி முழுவதும் கயிறுகட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்தனர்.

அப்போது அந்த கைப்பையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிந்தது. அதன்பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர். பின்னர் அந்த கைப்பையை திறந்து பார்த்தபோது அதில் அடையாள ஆவணங்கள் இருந்தன. பெண் பயணி யாராவது அதை தவறவிட்டு இருக்கலாம் என தெரிந்தது.

பின்னர் அந்த பையை விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில் விமானத்தில் வந்த பெண் ஒருவர், காரில் ஏறும்போது அந்த பையை தவறவிட்டு சென்றதாக கூறி, விமான நிலைய மேலாளரிடம் இருந்து அந்த பையை பெற்றுச்சென்றார். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
1 More update

Next Story