சிவகாசி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி; அலாரம் ஒலித்ததால் பணம் தப்பியது


சிவகாசி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி; அலாரம் ஒலித்ததால் பணம் தப்பியது
x
தினத்தந்தி 4 Sept 2019 4:30 AM IST (Updated: 3 Sept 2019 10:24 PM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் ஓடிவிட்டான். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது.

தாயில்பட்டி,

சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் சாத்தூர் சாலையில் அரசு வங்கி ஒன்று உள்ளது. அதன் அருகே அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்துக்கு காவலாளி நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம மனிதன் அங்கு வந்துள்ளான். அவன் கொண்டு வந்த ஆயுதத்தால் எந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளான்.

எந்திரத்தின் ஒரு பகுதியில் ஆயுதத்தால் குத்தியதும் எந்திரத்தில் இருந்து அலாரம் ஒலித்தது. அந்த சத்தம் கேட்டதும் கொள்ளையன் அங்கிருந்து ஓடிவிட்டான். இதற் கிடையே அலாரம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்தனர். கொள்ளை முயற்சி நடந்திருப்பது குறித்து வெம்பக்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைதொடர்ந்து போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது ஏ.டி.எம். மையத்தில் இருந்து பஸ் நிலையம் வழியாக சக்திவேல்நகர் வரை ஓடி அங்கு நின்று விட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். வங்கியில் பொருத்தப்பட்ட கேமராவில் மர்ம நபர் ஒருவர் வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை கொண்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை மடக்க விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வங்கி கிளை மேலாளர் லீனஸ்குமார் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story