பெரணமல்லூர் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு - 3 பேர் படுகாயம்


பெரணமல்லூர் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு - 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Sept 2019 4:00 AM IST (Updated: 3 Sept 2019 10:37 PM IST)
t-max-icont-min-icon

பெரணமல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெரணமல்லூர், 

பெரணமல்லூர் அருகே உள்ள சஞ்சீவிராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. அவருடைய மகன் பிரவீன்குமார் (வயது 22). இவரும், அன்மருதை கிராமத்தை சேர்ந்த அவருடைய நண்பர் தினகரன் (25) என்பவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்தவாசிக்கு சென்றனர்.

இதேபோல் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த கோபிநாதன் (30) என்பவரும், அவருடைய நண்பர் குடியாத்தத்தை சேர்ந்த பாலாஜி (23) என்பவரும் ஆரணி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

ஆவணியாபுரம் கூட்ரோடு அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தினகரன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும், கோபிநாதன், பாலாஜி ஆகியோர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story