மத்திய அரசின் புதிய திட்டத்தில் விருதுநகரில் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை


மத்திய அரசின் புதிய திட்டத்தில் விருதுநகரில் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 4 Sept 2019 4:15 AM IST (Updated: 3 Sept 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் விருதுநகரில் ஏற்கனவே அறிவித்தபடி மருத்துவ கல்லூரி தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கிளைகளை தொடங்கி வரும் நிலையில் தற்போது மாவட்ட அளவில் நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிக மாணவ- மாணவிகள் மருத்துவ கல்வி பயில வாய்ப்பு ஏற்படுவதுடன் இந்த மருத்துவ கல்லூரியுடன் இணையும் ஆஸ்பத்திரிகளும் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்க வாய்ப்பு ஏற்படும் என்பதே மத்திய அரசின் நோக்கம் ஆகும்.

கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதி நிலை அறிக்கையில் விருதுநகரில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனை தொடர்ந்து விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததுடன் அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்தார்.

ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் பல் மருத்துவ கல்லூரிக்கு தனியாக அனுமதி வழங்க முடியாது என்றும் மருத்துவ கல்லூரியுடன் இணைத்து தான் அனுமதி வழங்கமுடியும் என்றும் விதிமுறையை சுட்டிக் காட்டியதால் பல் மருத்துவ கல்லூரி தொடங்கும் திட்டமும் முடங்கிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேலும் கடந்த முறை எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்த போது, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி தொடங்க உதவிட வலியுறுத்தினார். தற்போது மத்திய அரசே 75 மருத்துவ கல்லூரி தொடங்க திட்டமிட்டுள்ளதால் விருதுநகரில் மருத்துவகல்லூரி தொடங்குவதற்கும் மத்திய அரசின் உதவியை பெறுவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

எனவே கல்வித்துறையில் சாதனை புரிந்து வரும் விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி தொடங்க மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தபட்டுள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த விருதுநகரில் தேவையான வாய்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டியதும் அவசியமாகும்.

Next Story