பணம் வராததால் ஆத்திரம்: ஏ.டி.எம். மையம் கண்ணாடி கதவை உடைத்த வாலிபரால் பரபரப்பு


பணம் வராததால் ஆத்திரம்: ஏ.டி.எம். மையம் கண்ணாடி கதவை உடைத்த வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Sep 2019 10:30 PM GMT (Updated: 3 Sep 2019 6:30 PM GMT)

நசரத்பேட்டையில் பணம் எடுக்க முயன்றபோது, பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம்.மைய கண்ணாடி கதவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி,

ஸ்ரீபெரும்புதூர், மேவளூர் குப்பம், வன்னியர் தெருவை சேர்ந்தவர் சுரேந்தர்குமார் (வயது 25). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நசரத்பேட்டையில் உள்ள திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் நசரத்பேட்டை, காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். ஆனால் அங்கு அவர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றும், பணம் வரவில்லை என்று தெரிகிறது.

இதைத்தொடர்ந்து பலமுறை முயற்சி செய்தும் பணம் வராததால், ஆத்திரமடைந்த சுரேந்தர்குமார் வெளியே வந்து ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடியை தனது கைகளால் உடைத்தார்.

இதில் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. அவரது கையிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கண்ணாடி கதவை உடைத்து நொறுக்கிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து விட்டு போலீஸ் நிலையத்தில் வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story