நிலச்சரிவால் கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையில் விழுந்து கிடக்கும் பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் பணி தொடங்கியது
கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. அந்த பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் பணி தொடங்கி உள்ளது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக மலப்புரம், திருச்சூர், கோட்டயம், பாலக்காடு உள்ளிட்ட பகுதிக்கு மலைப்பாதை செல்கிறது. கடந்த மாத தொடக்கத்தில் இருந்து கூடலூர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. 25 செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்ததால் கூடலூர்- கேரள எல்லையான கீழ்நாடுகாணியில் இருந்து வழிக்கடவு வரை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
மேலும் 5 இடங்களில் ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. சாலையும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. இதனால் கூடலூர்- மலப்புரம் இடையே கடந்த 1 மாதமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் 2 மாநிலங்களுக்கு இடையே வர்த்தக ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. மேலும் மருத்துவ சிகிச்சை மற்றும் வேலைக்காக செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுதவிர சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் நீலகிரி மாவட்டம் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்து வருகிறது.
கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையை சீரமைக்க முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக கேரள அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் சீரமைப்பு பணியை தொடங்க முடியாத நிலை காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் கீழ்நாடுகாணியில் இருந்து வழிக்கடவு மலைப்பாதை வரை பொக்லைன் எந்திரங்களை கொண்டு மண் குவியல்களை அகற்றும் பணியில் கேரள அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் கூடலூரில் இருந்து கேரள பகுதியில் உள்ள தேன்பாரா வரை சிறிய ரக வாகனங்கள் இயக்கப்பட்டன.
இதனால் கூடுதல் கட்டணம் செலுத்தி பொதுமக்கள் தேன்பாரா வரை பயணம் செய்தனர். பின்னர் அங்கிருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று மறுமுனையில் நிறுத்தப்பட்டு இருந்த கேரள பதிவு எண் கொண்ட தனியார் வாகனங்கள் மூலம் வழிக்கடவு, பெருந்தல்மன்னா, மலப்புரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். மலைப்பாதையில் விழுந்த 5 ராட்சத பாறைகளை வெடி வைத்து தகர்க்க கேரள அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக மலப்புரம், கோழிக்கோடு மாவட்ட கலெக்டர்களிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர்.
தற்போது 2 மாவட்ட நிர்வாகங்களும் முறையாக அனுமதி வழங்கி உள்ளது. இதனால் கூடலூர்- மலப்புரம் மலைப்பாதையில் கிடக்கும் ராட்சத பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சாலையில் வாகன போக்குவரத்து நடைபெற இன்னும் 2 மாதங்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து கேரள அதிகாரிகள் கூறும்போது, ராட்சத பாறைகளை மனித மற்றும் எந்திர சக்தி கொண்டு அகற்ற முடியாத அளவுக்கு உள்ளது. இதனால் வெடி வைத்து தகர்க்க திட்டமிட்டு மலப்புரம், கோழிக்கோடு மாவட்ட கலெக்டர்களிடம் சிறப்பு அனுமதி கேட்கப்பட்டது.
வெடி மருந்து கோழிக்கோட்டில் இருந்து வர வேண்டும் என்பதால் அந்த மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும். மேலும் ராட்சத பாறைகளை ஒரே நாளில் வெடி வைத்து தகர்க்க முடியாது. சாலையின் பலம் குறித்து ஆய்வு நடத்திய பின்னரே பாறைக்கு வெடி வைக்கப்படுகிறது. இதுதவிர சாலையும் பல இடங்களில் துண்டித்துள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நடைபெற இன்னும் சில நாட்கள் ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story