ஊட்டியில், குதிரை பந்தய மைதான நிலத்தை மீட்டு வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை
ஊட்டியில் குதிரை பந்தய மைதான நிலத்தை மீட்டு வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மதசார்பற்ற ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக், கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பிரமணியம் மற்றும் அரசியல் கட்சியினர் நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊட்டியில் மையப்பகுதியில் குதிரை பந்தய மைதானம் உள்ளதால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்வேறு வகையில் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. முக்கியமாக கோடை சீசனில் ஊட்டியில் ஏற்படும் வாகன நெரிசலால் சுற்று வட்டார பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவது வழக்கமாக உள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் குதிரை பந்தய மைதான நிலத்தை வாகன நிறுத்தும் வசதிக்காக பயன்படுத்தி போக்குவரத்தை முறைப்படுத்த எடுத்த முயற்சிக்கு அரசியல் கட்சிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது ஊட்டியில் குதிரை பந்தய மைதானத்தை வேறு இடத்துக்கு மாற்றலாம் என ஐகோர்ட்டு யோசனை வழங்கியதாக தெரிகிறது. மேலும் குதிரை பந்தயம் நடத்த இடம் தேர்வுக்காக கோத்தகிரி அருகே நெடுகுளா கடைக்கம்பட்டிக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ரேஸ் கிளப் நிர்வாகத்தினருக்கு அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தாக செய்திகள் வந்து உள்ளன.
அரசியல் கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி குதிரை பந்தய மைதானத்தை கடைக்கம்பட்டிக்கு மாற்றம் செய்ய நினைப்பது முற்றிலும் தவறானது. அப்பகுதி படுகர் இன மக்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதோடு, ஹெத்தையம்மன் திருவிழா மிகவும் கலாசாரத்தோடு நடத்தப்பட்டு வருகிறது. இறுதி சடங்கு செய்யும் இடமும் அங்கு அமைந்து உள்ளது. மேலும் பள்ளி, மேய்ச்சல் நிலம் உள்ளதால், இங்கு குதிரை பந்தயம் அமைத்தால் நீண்ட காலமாக கடைப்பிடித்து வரும் பாரம்பரிய, சம்பிரதாய முறைகள் சிதறுண்டு போகும்.
எனவே கடைக்கம்பட்டியில் குதிரை பந்தய மைதானம் அமைக்கக்கூடாது என்று கிராம மக்களும், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டால் நீலகிரி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும். மெட்ராஸ் ரேஸ் கிளப்பை சேர்ந்தவர்களும் கடைக்கம்பட்டியில் உள்ள நிலம் தங்களுக்கு உகந்தது அல்ல என்று ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளனர். ஆகவே அப்பகுதியில் குதிரை பந்தய மைதானம் அமைக்கக்கூடாது. ஊட்டி குதிரை பந்தய மைதான நிலத்தை ஐகோர்ட்டு மூலம் மீட்டு வாகனம் நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு குறித்து கலெக்டர் அரசியல் கட்சியினரிடம் கூறும்போது, மாவட்ட நிர்வாகமோ அல்லது தமிழக அரசோ கடைக்கம்பட்டி பகுதியில் குதிரை பந்தய மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஐகோர்ட்டில் நீதிபதிகள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளதா? என்று கேட்டதை அடுத்து, அப்பகுதியில் இடம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதால் இதுகுறித்து எதுவும் தெரிவிக்க இயலாது என்றார்.
Related Tags :
Next Story