குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில், லாரியை வழிமறித்த காட்டு யானைகள்


குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில், லாரியை வழிமறித்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 3 Sep 2019 10:30 PM GMT (Updated: 3 Sep 2019 6:55 PM GMT)

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் லாரியை வழிமறித்தன.

குன்னூர்,

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறங்களிலும் காட்டேரி முதல் கல்லாறு வரை தனியார் தேயிலை, காபி தோட்டங்கள் மற்றும் வனப்பகுதி காணப்படுகிறது. இந்த வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் தனியார் தேயிலை, காபி தோட்டங்களில் பலா மரங்களும் நடவு செய்யப்பட்டு உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் பலாப்பழ சீசன் நிலவும். பலாப்பழங்களை தின்பதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வரும். அப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். பலாப்பழ சீசன் முடிந்து மழைக்காலம் தொடங்கியதும், இங்கிருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து மீண்டும் சமவெளி பகுதிகளுக்கு செல்லும். அப்போதும் மேற்கண்ட சாலையில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த நேரங்களில் வாகன போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் பர்லியார் பகுதியில் நேற்று மதியம் 12.30 மணிக்கு குட்டியுடன் காட்டுயானை உலா வந்தது. மேலும் அவை அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்தன. இதனால் டிரைவர் பீதி அடைந்தார். உடனே லாரியை நிறுத்தி, காட்டுயானைகள் அங்கிருந்து செல்லும் வரை பொறுமை காத்தார். லாரியை தொடர்ந்து பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு குட்டியுடன் காட்டுயானை சாலையில் இருந்து விலகி அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.

Next Story