கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்


கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Sept 2019 3:45 AM IST (Updated: 4 Sept 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் கண்டக்டர் இறந்த சம்பவத்தில் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்த போலீஸ்காரரை கைது செய்யக்கோரி கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நடுவழியில் பஸ்களை நிறுத்தியதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கடலூர்,

கடலூர் மஞ்சக்குப்பம் முத்தையாநகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(வயது 55). கண்டக்டரான இவர் நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சில் பணியில் இருந்தார். பண்ருட்டி அருகே உள்ள காணாங்குப்பத்தை சேர்ந்த சாரங்கபாணி என்பவர் பஸ்சை ஓட்டினார்.

விருத்தாசலத்தில் பயணிகளை ஏற்றி இறக்கிய பின்னர் பஸ் அங்கிருந்து கடலூருக்கு புறப்பட்டது. கண்டக்டர் கோபிநாத் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஏட்டு பழனிவேல் என்பவர் டிக்கெட் எடுக்க மறுத்தார். உடனே கோபிநாத் அவரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கூறினார். ஆனால் பழனிவேல் அடையாள அட்டையை காட்ட மறுத்ததால் அவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நெய்வேலி அருகே உள்ள ஊமங்கலத்தில் பஸ் வந்தபோது திடீரென மயங்கி விழுந்த கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும், பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்த போலீஸ் ஏட்டு பழனிவேலை கைது செய்யக் கோரியும் நேற்று கடலூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கருப்புகொடியுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டம் குறித்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூறும்போது, இறந்துபோன கண்டக்டர் கோபிநாத்தின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குடும்பத்துக்கு உரிய ந‌‌ஷ்டஈடு வழங்க வேண்டும், டிக்கெட் எடுக்காமல் கண்டக்டரிடம் தகராறு செய்த போலீஸ் ஏட்டுவை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இதற்கிடையே போராட்டம் குறித்த தகவல் அறிந்து கடலூர் போலீசார் விரைந்து வந்தனர். போக்குவரத்து கழக தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு சமாதான பேச்சுவார்த்தைக்கு வரும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் அழைப்பு விடுத்தார். இதையடுத்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

பின்னர் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த சி.ஐ.டி.யு. சம்மேளன துணை தலைவர் பாஸ்கரன் கூறும்போது, டிக்கெட் எடுக்காமல் கண்டக்டர் கோபிநாத்திடம் தகராறு செய்த போலீஸ்காரரை கைது செய்ய வேண்டும் என்று கூறினோம். அதற்கு அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார். கோபிநாத்தின் குடும்பத்துக்கு ந‌‌ஷ்டஈடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற மற்ற 2 கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளதாக என்றார்.

மறியல் போராட்டத்தின் போது கடலூர்-சிதம்பரம் சாலையில் அரசு பஸ்களில் பணியில் இருந்த டிரைவர், கண்டக்டர்கள் பஸ்சை நடுவழியிலேயே நிறுத்தியும், சிலர் சாலையோரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டும் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்தனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் தவித்தனர்.

Next Story