சூலூர் அருகே, பூசாரி வீட்டில் திருடிய தம்பதி உள்பட 4 பேர் கைது
சூலூர் அருகே, பூசாரி வீட்டில் திருடிய தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சூலூர்,
கோவையை அடுத்த சூலூர் அருகில் உள்ள காங்கேயம்பாளையம் அன்னலட்சுமி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். மாலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் சூலூர் அடுத்த செங்கத்துறை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மொபட்டில் வந்த பெண் உள்பட 4 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் அவர்கள் 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சூலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் திருப்பூர் திருவள்ளுவர் தோட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (29), அவருடைய மனைவி தேவி (27) மற்றும் தேவியின் தம்பி மணிகண்டன் (22), திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரை சேர்ந்த முனியப்பன் (27) என்பதும் காங்கேயம்பாளையத்தில் பூசாரி வீடு உள்பட பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் திருப்பூரில் இருந்து சூலூர் வந்து வீடுகளுக்குள் புகுந்து நகை மற்றும் துணி உள்பட வீட்டு உபயோக பொருட்களையும் அவர்கள் திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக அவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம், மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story