காஞ்சீபுரம் அருகே கல்குவாரி குடோன் வெடி விபத்தில் 2 பேர் படுகாயம் - 15 ஆடுகள் உயிரிழந்தன


காஞ்சீபுரம் அருகே கல்குவாரி குடோன் வெடி விபத்தில் 2 பேர் படுகாயம் - 15 ஆடுகள் உயிரிழந்தன
x
தினத்தந்தி 3 Sep 2019 11:15 PM GMT (Updated: 3 Sep 2019 7:00 PM GMT)

காஞ்சீபுரம் அருகே கல்குவாரி குடோன் வெடி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 15 ஆடுகள் உயிரிழந்தன.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே மாகரல் பகுதியில் கொளப்பாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. பாறைகளை உடைப்பதற்காக இங்கே ஜெலட்டின் குச்சிகள் வைப்பதற்கான குடோன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக குடோனில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

2 பேர் படுகாயம்

இதில் குடோன் முற்றிலும் இடிந்து தரை மட்டமானது. இந்த விபத்தில் கல்குவாரியில் பணிபுரிந்து வந்த விஜயன் (வயது 30), லோகநாதன் (33) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் விஜயன் கிராம மக்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லோகநாதன் (33) கட்டிட இடிபாடுகளில் சிக்கினார்.

அவரை தீயணைப்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

வெடி விபத்து நடந்த இடத்தில் நின்றுக்கொண்டிந்த 15 ஆடுகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தன.

இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட இடத்தை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Next Story