திம்மாச்சிபுரத்தில், கோவில் திருவிழாவுக்கு தடை - சாலையோரத்தில் பொதுமக்கள் தர்ணா
திம்மாச்சிபுரத்தில் கோவில் திருவிழா நடத்த கோர்ட்டு தடை விதித்ததால், பொதுமக்கள் சாலையோரத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
லாலாபேட்டை,
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே திம்மாச்சிபுரத்தில் உள்ள கனகதோனியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் இந்த கோவிலில் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் சார்பில் தலா 8 பேர் கையொப்பமிட்டு, ஒற்றுமையாக திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி திருவிழா நடத்த கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டது. திருவிழாவையொட்டி கடந்த ஒரு வாரமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் திருவிழா தொடங்கி இரவில் கொடியா மணி என்ற சாமி ஊர்வலம் வந்தது.
நேற்று சிறிய தேர் வலம் வர அலங்காரம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது ஒரு தரப்பினர், திருவிழா நடத்த மதுரை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றிருப்பது தெரியவந்தது. ஆனால், திருவிழாவிற்காக பல்வேறு ஊர்களில் இருந்து தங்கள் வீடுகளுக்கு உறவினர்கள் வந்துள்ள நிலையில், திருவிழாவிற்கு தடை என்பதை அறிந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவில் அருகே திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, திருவிழா நடத்த கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில் நிர்வாக இணை ஆணையரிடம் பேசி முடிவு எடுத்து அமைதியாக திருவிழா நடத்தலாம், என்று கூறினார். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து குளித்தலை தாசில்தார் செந்தில் அங்கு வந்தார். மேலும் லாலாப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story